வணிகர் நலவாரிய தொகுதி நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்: ஜெயலலிதா அறிவிப்பு
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
1. வணிகர்களின் நலனுக்காக குடும்பநல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறாமல், உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று வணிகம் செய்யும் சிறு வணிகர்களும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரியத்தின் தொகுப்பு நிதி 2012ஆம் ஆண்டில் 2 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எங்களது தேர்தல் அறிக்கையில் ‘வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், வணிகர் நல வாரியத்தின் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் இவ்வாரியத்தில் உறுப்பினராக உள்ள வணிகர்கள் பயன்பெறுவர்.
2. வணிக வரித் துறையின் அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டு, “இ-சி டாக்ஸ்” என்ற புதிய மென்பொருள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. கணினி வசதி இல்லாத சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு எடுத்துச் செல்வோர் தங்களது மாதாந்திர நமூனாக்களை பதிவேற்றம் செய்வதிலும், எடுத்து செல்லும் பொருட்களுக்கான படிவங்களை கணினி மூலம் பூர்த்தி செய்து அளிப்பதிலும் உள்ள சிரமங்களைக் களையும் வகையில், வணிகர்கள் தங்களது மாதாந்திர நமூனாக்களை கணினியில் பதிவேற்றம் செய்ய உதவியாக, 228 வணிக வரி அலுவலகங்களில் உதவி மையம் ஏற்படுத்தப்படும். இச்சேவைக்கு என வணிகர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
மேலும், வணிக வரித்துறையின் புதிய இணையதள சேவைக்கு பதிவு செய்தல், புதிய பதிவுச்சான்று பெறுதல்; வங்கிகளில் வரி செலுத்துவதற்குரிய மின் செலுத்துகைச் சீட்டினை பதிவிறக்கம் செய்தல் மற்றும் துறையின் படிவங்களை பதிவிறக்கம் செய்தல் போன்ற சேவைகளை தமிழ் நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 486 அரசு மின்சேவை மையங்கள் மூலம், உரிய கட்டணங்கள் செலுத்தி பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.
3. பணியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு கூடுதல் வசதி செய்திடவும், பணி செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிடவும், சொந்த கட்டடங்கள் தேவை என்பதைக் கருத்திற் கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் 64 அலுவலகங்களை உள்ளடக்கிய 33 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பழனி ஆகிய 3 இடங்களிலும் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில், 9 வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வணிக வரிக்கட்டடங்கள் கட்டப்படும்.
1 comment:
Good Share... Keeping share......
Post a Comment